பள்ளி தலைமை ஆசிரியை அறையில் பணம் திருடிய முதியவர் கைது

பள்ளி தலைமை ஆசிரியை அறையில் பணம் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-21 20:11 GMT

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சி குறித்த பல்வேறு பணிகளுக்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பள்ளியின் தலைமை ஆசிரியை அறையில் உள்ள ஒரு பீரோவில் வைத்துவிட்டு, கடந்த மாதம் 19-ந் தேதி மாலை பள்ளியை பூட்டிவிட்டு தலைைம ஆசிரியை சென்று விட்டார். மறுநாள் காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், அலுவலகம் மற்றும் தலைமை ஆசிரியை அறையின் பூட்டுகள் மற்றும் உள்ளே இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோவில் பார்த்தபோது ரூ.3 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவுக்கான மானிட்டரும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து துவரங்குறிச்சி போலீசார் பள்ளிக்கு சென்று, கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது முதியவர் ஒருவர் பூட்டை உடைத்து பள்ளிக்குள் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் துவரங்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு முதியவரை விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவரை துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் களத்து மேடு தெருவை சேர்ந்த மகேந்திரன்(வயது 68) என்பதும், பள்ளியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்