தொகுப்பு வீடு கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர்
தொகுப்பு வீடு கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் வந்தாா்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கிற்குள் முதியவர் ஒருவர் செல்ல முயன்றார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற புதுநகர் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர், கையில் பெட்ரோல் பாட்டிலை மறைத்து வைத்திருந்தார். இதை பார்த்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரித்ததில், அவர் பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (வயது 60) என்று தெரிந்தது. அவரது வீடு கடந்த 2008-ம் ஆண்டு தீ விபத்தில் சேதமாகி விட்டது. இதனால் அவர் தொகுப்பு வீடு கேட்டு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.