90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி
சின்னசேலம் அருகே 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சின்னசேலம்
சின்னசேலம் அருகே தகரை கிராமம், வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கருப்பாயி(வயது 87). இவர் நேற்று காலை அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு நடந்து சென்றபோது அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான 90 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது கருப்பாயி கிணற்றுக்குள் பக்கவாட்டில் இருந்த ஒரு கயிற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிற்றை கட்டி இறங்கி காற்று நிரப்பிய ரப்பர் பலூனில் மூதாட்டியை பாதுகாப்பாக உட்கார வைத்து கயிற்றின் மூலம் உயிருடன் மீட்டனர். 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டி காயம் இன்றி உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.