சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - 12-ந்தேதி வரை நடக்கிறது

சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தொடங்கியது. வருகிற 12-ந்தேதி வரை பொதுமக்கள் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Update: 2022-09-01 08:12 GMT

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சிவில்‌ என்ஜினீயரான இவர், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது.

சிட்லபாக்கம் ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர், சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகர், சந்தனத்திலான விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், திருக்கல்யாண விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தாமரையில் மலரும் மூவர்ண நிறத்திலான விநாயகர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறுவிதமான விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை வருகிற 12-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்