தப்பிச்சென்ற விசாரணை கைதி சிக்கினார்
ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி சிக்கினார்
ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்அலி (வயது 28). திருட்டு வழக்கு விசாரணைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை குற்ற தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த அஷ்ரப்அலி கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்று ஜன்னல் கம்பியை வளைத்து தப்பி ஓடினார். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து அஷ்ரப்அலியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் மண்டபம் பகுதியில் மறைந்திருந்த அஷ்ரப்அலி குறித்து தகவல் கிடைத்து போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து வந்தனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.