விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
சமயபுரம்:
தடுப்புச்சுவரில் மோதியது
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டி பேராயர் பகுதியை சேர்ந்த செல்வத்தின் மகன் முருகன்(வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் திருச்சியில் உள்ள தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் காப்புக்காடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதியது.
சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய முருகனை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.