கல்வி, மருத்துவத்திற்கு ரூ.2 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கல்வி மற்றும் மருத்துவத்திற்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2023-02-10 19:04 GMT

சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கல்வி மற்றும் மருத்துவத்திற்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கூறினார்.

இதுகுறித்து அவா் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 நூலகங்கள்

நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் வழங்கப்படும் தொகையை கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்கு வழங்க முடிவு செய்துள்ளேன். அதன்படி சிவகங்கை அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரியக்குடி கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி நூலகத்தைப் போல நூலகம் அமைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் தளவாட பொருள்கள் வாங்குவதற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.25 ஆயிரமும் என ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வீதம் ரூ.55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 3 பள்ளிகளில் நூலகங்கள் திறக்கப்பட்டு விட்டது. தற்போது 5 பள்ளிகளில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளது. விரைவில் மற்ற நூலகங்களும் செயல்பட தொடங்கும். இது தவிர உஞ்சனை, அதிகரம், மல்லல் ஆகிய ஊர்களில் உள்ள 3 ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்காக தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 12 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நூலகங்களில் புதிதாக புத்தகங்கள் வாங்குவதற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம்

இதுதவிர சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் அதை அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்காக தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியே 47 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்