அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குடிநீர் திட்ட பணிகளுக்காக வெடிவைத்து பாறைகள் தகர்ப்பு- வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் புகார்

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குடிநீர் திட்ட பணிகளுக்காக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகின்றன. அப்போது வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-27 22:02 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குடிநீர் திட்ட பணிகளுக்காக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகின்றன. அப்போது வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் திட்ட பணிகளுக்கு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவிரியாற்றின் மறுகரையில் சேலம் மாவட்டம் ராசிபுரம்-மல்லசமுத்திரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக ஆற்றில் உள்ள பாறைகள் வெடி ைவத்து தகர்க்கப்படுகின்றன. மேலும் அதிக ஒலி எழுப்பும் பெரிய வெடிகள் வைப்பதாகவும், அதுபோன்ற நேரங்களில் கரையோரத்தில் உள்ள வீடுகள் அதிர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் மறுகரையில் வெடி வெடிக்கும்போது பாறைகள் சிதறி ஆற்றின் நடுப்பகுதி வரை வந்து விழுவதாகவும், அதனால் குளிப்பவர்களுக்கும், மீன் பிடிப்பவர்களுக்கும் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நிலநடுக்கம்போல்...

இதுகுறித்து அம்மாபேட்டை பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த 2 மாதமாக ஆற்றின் மறுகரையில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காட்டூர் பகுதியில் ஒரு நீரேற்று நிலையும் இருக்கும் நிலையில் மீண்டும் அதே இடத்தில் ராசிபுரம்-மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எந்த முன் அறிவிப்பும் இன்றி பாறைகளுக்கு வெடி வைக்கப்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்படுவதுபோல் வீடுகள் அதிர்கின்றன. சுவற்றில் விரிசல் ஏற்படுகின்றன. அடுக்கி வைத்திருக்கும் பாத்திரங்கள் உருண்டு விழுகின்றன. மேலும் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க பயமாக உள்ளது. மறுகரையில் இருந்து ஆற்றின் நடுப்பகுதி வரை கற்கள் விழுகின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க அச்சப்படுகிறார்கள். எனவே குறைந்த அளவு ஒலி எழுப்பும் வெடிகளையே பயன்படுத்த வேண்டும். அதேபோல் வெடி வைக்கும்போது பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்