அமராவதி ஆற்றின் உபரி நீரை சேமிக்க தடுப்பணை

Update: 2023-09-26 16:45 GMT


நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் உள்ளதால் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் அமராவதி ஆற்றின் உபரி நீரை சேமிக்க தடுப்பணை அமைக்க மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கான்கிரீட் பாலம்

திருப்பூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திட்டக்குழு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். துணை தலைவரான கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்டவை திட்டக்குழு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, மாநில திட்டக்குழு ஒப்புதல் பெற்று நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும்' என்றார்.

மாவட்ட திட்டமிடும் அலுவலர் முரளிகண்ணன் வரவேற்றார். திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில், அமராவதி ஆற்றின் தென்புறம் உள்ள கரைப்பகுதி மதுக்கம்பாளையம் மற்றும் அமராவதி ஆற்றின் வடபுறம் உள்ள கரைப்பகுதி குள்ளகாளிபாளையம் இடையே 250 மீட்டர் தூரம் கான்கிரீட் பாலம் அமைத்தால் 12 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வது குறைக்கப்படும். தாராபுரம், வெள்ளகோவில் பகுதிக்கு செல்வதற்கான காலஅவகாசம் குறையும். பாலம் அமைக்கும் தீர்மானத்தை மாவட்ட திட்டக்குழு தலைவர் கொண்டு வந்தார்.

அமராவதி ஆற்று உபரிநீரில் தடுப்பணை

இதுபோல் திருப்பூர் மாநகராட்சி எஸ்.வி.காலனி நாவலர் வீதியில் 30 அடி ஆழ நீர்நிலை குட்டை உள்ளது. அந்த பகுதி தாழ்வாக இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மழைகாலத்தில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை மேடான பகுதியாக மாற்ற வேண்டும். தாராபுரம் வீராச்சிமங்கலம் ஊராட்சியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கல் அணை சிதலமடைந்து உள்ளது. கான்கிரீட் தடுப்பணை அமைக்க வேண்டும். தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனியில் காதி மற்றும் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான 1 ஏக்கரில் 10 ஆயிரம் அடி பரப்பளவில் சிதலமடைந்து கட்டிடங்கள் உள்ளன. குற்ற செயல்கள் நடக்கிறது. குப்பை தேங்குகிறது. அந்த கட்டிடங்களை அகற்றி, அரசுக்கு தேவையான கட்டிடங்கள் அமைக்க வேண்டும்.

தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் அமராவதி ஆற்றின் உபரிநீர் மீண்டும் சென்று தாளக்கரையில் அமராவதி ஆற்றில் இணைகிறது. உபரி நீர் அதிகம் வரும்போது உழவருக்கு பயன் இல்லாமல் ஆற்றில் காவிரியில் கலக்கிறது. சின்னக்கரையின் இருபுறமும் உள்ள தோட்டம், ஆழ்துளை கிணறு, கிணற்று நீரில் உப்புத்தன்மை 1,800 முதல் 2,200 வரை அதிகமாக உள்ளதால் பயிர் மகசூல் பெற முடியவில்லை. குடி நீருக்கு கூட நீரை பயன்படுத்த முடியவில்லை. இந்த பகுதியில் கான்கிரீட் தடுப்பணை அமைத்துக்கொடுத்தால் நிலத்தடி உப்பு நீர் நல்ல நீராக கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தடுப்பணை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

அமராவதி ஆற்றின் உபரி நீரை சேமிக்க தடுப்பணை

பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாதப்பூரில் இருந்து கொங்கு வேளாளர் திருமண மண்டபம் வரை வெளிவட்ட சாலை அமைக்க திட்ட மதிப்பீடு, ஆய்வுப்பணிகள் முடிந்தும் திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது. விரைந்து செயல்படுத்த வேண்டும்.

உடுமலையில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் 1½ ஏக்கரில் உள்ளது. இங்கு செம்மொழி பூங்கா அமைத்தால் சுற்றுலாவுக்கு வருபவர்கள் பார்த்து மகிழ முடியும். ஊத்துக்குளி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் 18 தீர்மானங்கள் மாவட்ட திட்டக்குழுவுக்கு அனுப்பப்படும். 2 தீர்மானங்கள் இங்குள்ள உள்ளாட்சி அமைப்பு மூலம் மேற்கொள்ள வேண்டியவை என்று திட்டமிடும் அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்