ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் (1980-83) இளங்கலை பொருளியல் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதலில், கல்லூரி வளாகத்திலுள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருவுருவ சிலைக்கும், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பழைய மாணவரும், தற்போது கல்லூரி பொருளியல் துறை தலைவருமான ரமேஷ் வரவேற்றார். பின்னர் பழைய மாணவர்கள் 44 பேரும் தங்களை அறிமுகப்படுத்தி கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பொன்னாடை போற்றி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், கல்லூரி பயின்றோர் கழக துணை செயலாளரும் பேராசிரியருமான கதிரேசன் வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து பழைய மாணவர்கள் ஞானசேகரன், அழகேசன், சிமியோன் செல்வ சிங், பாஸ்கர், ரமேஷ்குமார், ஜெயபால் ஆகியோர் இதய உரையாற்றினர். பின்னர் முன்னாள் பேராசிரியர்கள் அலெக்சாண்டர் கனகராஜ், ஆழ்வார், பாபு சிவராஜ் கிருபாநிதி, குத்தாலிங்கம், செல்லத்துரை, பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தனர். பின்னர், தாங்கள் படித்த கல்லூரி வளாகத்தை சுற்றி பார்த்து பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவரும் தாங்களது பேராசிரியர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொருளியல் துறை பேராசிரியர் சிவ இளங்கோ தொகுத்து வழங்கினார். முடிவில், பழைய மாணவர் வக்கீல் நடேச ஆதித்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர்கள் முருகேஸ்வரி, உமாஜெயந்தி மற்றும் ஆரோக்கிய அமுதன் ஆகியோர் செய்திருந்தனர்.