டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் நடந்தது.

Update: 2023-03-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதில் 10-ம் நாள் திருவிழா நாடார் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி காலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், திப்பணம்பட்டி, அரியப்பபுரம், கல்லூரணி, குறும்பலாபேரி, கீழப்பாவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மேலும் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

இதில் காமராஜர் மார்க்கெட் சங்க செயலாளர் நாராயண சிங்கம், நிர்வாகிகள் எஸ்.பி.கண்ணன், முருகேசன், கண்ணன்மோகன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, செயலாளர் பரமசிவம், துணை தலைவர் ஈஸ்வர பாண்டியன், பால் கண்ணன், தங்கதுரை, மேகநாத பிரபு, செல்வகுமார், காமராஜ், வெண்ணிகுமார், முருகன், முத்துக்குமார், சுதன், சண்முகராஜ் மற்றும் சிவந்தி ஆதித்தனார் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வீரர்களும் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 10 நாட்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து முருகன் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு கீழப்பாவூர் தெப்பக்குளம் அருகே உள்ள நரசிம்மர் கோவில் சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு அனைத்து திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி புறப்பட்டு கோவில் வந்தடைந்தவுடன் கீழப்பாவூர் ராம பஜனை மண்டலியர் நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், கும்மி நடத்தினர்.

திருவாடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த பேராசிரியர் சாந்தி ரவிபாலன் சொற்பொழிவு, தொடர்ந்து சண்முகா அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை பிராமணர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்