நெல்லை-திருச்செந்தூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்க அனுமதி

நெல்லை-திருச்செந்தூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-10 19:28 GMT

நெல்லை-திருச்செந்தூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் ரெயில்

நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் வரை 61 கிலோ மீட்டர் தூரம் பாசஞ்சர் ரெயில்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலக்காடு, வாஞ்சி மணியாச்சியில் இருந்து பாசஞ்சர் ரெயில்களும், சென்னை -திருச்செந்தூர் இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

தற்போது இந்த பாதையில் ரெயில்கள் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்த பகுதியில் ரெயில் தண்டவாளம் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணி சமீபத்தில் முடிவடைந்து அதிவேக ரெயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

110 கி.மீ. வேகம்

இதையடுத்து நெல்லை - திருச்செந்தூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை -திருச்செந்தூர் இடையே ரெயில்களை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 1 மாத காலத்துக்குள் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். மேலும் செங்கோட்டை - கொல்லம், திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி, மதுரை - விருதுநகர் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் கடந்து செல்லும் போது நேரடி ரெயில் பாதையில் (மெயின் லைன்) இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் (லூப் லைன்) பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த வேகமும் தற்போது 30 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்