ரேஷன் கடைகளுக்கு தரம் இல்லாத அரிசி ஒதுக்கீடு
உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப குடோனில் ரேஷன் கடைகளுக்கு தரம் இல்லாத அரிசி ஒதுக்கீடு செய்ததால் அதிகாரியிடம், பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
தரமற்ற ரேஷன் அரிசி
உத்தமபாளையத்தில் நுகர்பொருள் வாணிப கழக குடோன் உள்ளது. அங்கு இருந்து உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 165 ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி ஆகிய ரேஷன் கடை பணியாளர்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வந்தனர். அப்போது குடோனில் மூட்டைகளில் தரம் இல்லாத ரேஷன் அரிசி கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
அதிகாரியிடம் வாக்குவாதம்
இதை பார்த்த பணியாளர்கள் தரமற்ற அரிசியை எடுத்து செல்ல மறுத்து, குடோன் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சூப்பிரண்டிடம் கேட்டபோது, குடோனுக்கு வந்த அரிசி தான் ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறோம். அதாவது லாரியில் ஒரு லோடு ஏற்றுகிறோம் என்றால், அதில் சில மூட்டைகளில் அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கிறது. நாங்கள் என்ன செய்வது. அரிசி வந்ததை திருப்பி அனுப்ப முடியாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டபோது, பழுப்பு நிறம் உள்ள அரிசியை ரேஷன் கடைகள் வினியோகம் செய்தால் பொதுமக்கள் வாங்க மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் நாங்கள் அந்த அரிசியை எப்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியும் என்றனர்.