மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் மத்திய அரசின் சாகர் பரிக்ரமா என்ற திட்டத்தின்கீழ் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா பேசியதாவது:- நாடு சுதந்திரம் அடைந்து இதுநாள்வரை மீனவர்களுக்கென தனி அமைச்சரகம் கிடையாது. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தனி அமைச்சரகத்தை உருவாக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்த அமைச்சரகத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள படகுகள் 60 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆழப்படுத்த நடவடிக்கை
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த 5 துறைமுகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். அதுபோக தமிழ்நாட்டு மீனவர்களின் செயல்பாடுகள் நம் இந்திய நாட்டிற்கு வருமானம் ஈட்டக்கூடிய நிலையில் உள்ளது.
ஆகையால் மத்திய அரசு திட்டங்களை மீனவர்கள் பயன்படுத்தி மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஜெகதாப்பட்டினத்தில் கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவாக உள்ளது. இதனால் படகுகள் வர சிரமமாக உள்ளது போல் தெரிகிறது. இதனால் இதனை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடன் அட்டை
மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
மீனவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. கடல்பாசி வளர்ப்பிற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கே.சி.சி. கடன் அட்டைபோல், மீனவர்களுக்கும் தற்பொழுது மத்திய அரசு கே.சி.சி. கடன் அட்டை (கிசான் கடன் அட்டை) வழங்குகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த உதவியாக இருக்கிறது. கூண்டுகள் மூலம் கடல் பகுதியில் மீன் வளர்ப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதனால் பல்வேறு மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மீனவர்களுக்கு மத்திய மந்திரிகள் கடன் அட்டைகளை வழங்கினர். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத்துறை செயலர் அபிலேஷ் லிகி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மத்திய மீன்வளத்துறை இணைச் செயலாளர் நீத்து குமாரி பிரசாத், மத்திய மீன்வளத்துறை துணைச் செயலாளர் ஜுபின் மகாபத்ரா, மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா, அறந்தாங்கி ஆர்.டி.ஓ. மாரி, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மகளிர் அணி மாநில செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட பொதுச்செயலாளர் முரளி மற்றும் பா.ஜ.க. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் புதிதாக கட்டப்பட்ட மீனவர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடத்தை மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா திறந்து வைத்தார்.