கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு

புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வேக்கு சி.எம்.டி.ஏ. கோரிக்கை விடுத்துள்ளது.;

Update:2024-01-04 09:35 IST

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்ல கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) சார்பில் முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்த தொகை 20 கோடி ரூபாயை தெற்கு ரெயில்வேக்கு சி.எம்.டி.ஏ. வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வேக்கு சி.எம்.டி.ஏ. கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்றுசெல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்