கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு- வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தகவல்

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தெரிவித்தார்.

Update: 2023-05-04 20:17 GMT

கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தெரிவித்தார்.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம், கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.4 கோடி ஒதுக்கீடு

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், ''நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1½ கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரை திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து பகுதிகளில் முக்கிய பணிகள் குறித்து பட்டியலை தயார் செய்து 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடிநீர் தட்டுப்பாடு

பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்று உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டதால், வறட்சி அதிகமாக உள்ளது. எனவே கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து சார்பில், குடிநீர் பற்றாக்குறையை போக்க, 50 ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய 15-வது நிதிக்குழு மற்றும் பொது நிதியில் இருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 204 பஞ்சாயத்துகளில் உள்ள 1,489 தூய்மை பணியாளர்களுக்கு தலா 2 சீருடை, கையுறை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளோம். இதுதவிர கிராம சாலைகளை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்டக்குழு தேர்தல்

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் சுப்பிரமணியன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ''விரைவில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறுகிறது. அதில் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 8 பேர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 10 பேர் என மொத்தம் 18 பேர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதற்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்'' என்றார்.

தெப்பத்திருவிழா

ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும், இரவில் சுவாமி-அம்மாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தெப்பத்தில் அமர்ந்து சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்