ஊராட்சி பகுதிகளில் பணி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்
ஊராட்சி பகுதிகளில் பணி செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்று கந்திலி ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
கந்திலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், கால்வாய், தெரு விளக்கு, புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கித்தர கோரிக்கை வைத்தனர். மேலும் மண்டலநாயனகுண்டா பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்தும் ஒன்றிய பொது நிதியிலிருந்து வரவு செலவு கணக்குகள் குறித்தும் ஆவாஸ்யோஜனா, வீடு வழங்கும் திட்டம் மூலம் வழங்கப்படும் கம்பி சிமெண்ட், வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
வெளிப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு பதிலாக நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும், அமர்வுப்படி உயர்த்தி வழங்க வேண்டும், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் டாக்டர் லீலாசுப்ரமணியம், சாந்தகுமார், சின்னத்தம்பி, கோவிந்தன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்தனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்.