போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வருகிற 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்துதுறை உத்தரவு

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன் நாளை காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Update: 2024-01-07 13:26 GMT

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வருகிற 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வருகிற 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன் நாளை காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்று அமைச்சர் சிவசங்கர் வராததால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிவிட்டு அமைச்சர் வராதது கண்டிக்கத்தக்கது என அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்