மழைக்காலம் வர உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டும்; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மழைக்காலம் வர உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டும் என்று விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-10-03 18:45 GMT

நகரமன்ற கூட்டம்

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், நந்தா நெடுஞ்செழியன், பத்மநாபன், புல்லட்மணி, கோல்டு சேகர், வக்கீல் ராதிகா செந்தில், ஜெயப்பிரியா சக்திவேல், இளந்திரையன், ரியாஸ் அகமது, இம்ரான்கான், வடிவேல் பழனி, வித்யசங்கரி உள்ளிட்டோர், வார்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

சலசலப்பு

நகராட்சி 36-வது வார்டில் எந்தவொரு தெருவிலும் சாலை வசதி இல்லை. நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட 17 வார்டுகளில் எந்தவொரு வார்டிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் எப்போது பணிகளை முடிப்பீர்கள்? வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுமையாக முடித்தால்தான் நாங்கள் மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும். 1-வது வார்டில் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, தெருமின் விளக்கு, கூடுதல் ரேஷன் கடை, கருமகாரிய கொட்டகை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தருமாறு பலமுறை முறையிட்டபோதிலும் நடவடிக்கை இல்லை. கர்நாடகா அரசு, காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுப்பது போல், நகராட்சி அதிகாரிகள் எங்கள் வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். மக்கள் சார்பில், நான் உங்கள் காலில் விழுந்துகூட கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வையுங்கள் என அ.தி.மு.க. கவுன்சிலர் கோல்டுசேகர், அதிகாரிகளிடம் கூறியதால் கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

புறக்கணிப்பா?

மேலும் 9-வது வார்டுக்குட்பட்ட மேல்தெரு மேம்பால பகுதியில் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்குடையும், 2 இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளோம். 2½ ஆண்டுகளாகியும் இதுநாள் வரையிலும் நடவடிக்கை இல்லை. எந்தவொரு பணியையும் நிறைவேற்றாமல் எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள். நாங்கள் மக்களை எப்படி சென்று சந்திப்பது, அ.தி.மு.க. வார்டு என்பதால் புறக்கணிக்கிறீர்களா? என்று கவுன்சிலர் ராதிகா செந்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வாய்க்காலை தூர்வார

தொடர்ந்து, மழைக்காலம் வர உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்கால் அனைத்தையும் விரைந்து தூர்வாரி சீரமைக்க வேண்டும். மழைக்காலத்தின்போது குடியிருப்பு பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கக்கூடாது. 39-வது வார்டில் வீடுகளுக்கு வரி வசூலிக்கும்போது அனைத்து வீடுகளுக்கும் வரி வசூலை முறைப்படுத்த வேண்டும். நகராட்சி கவுன்சிலர்களின் ஒப்புதலோடு வரி நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, நகரின் அனைத்து வார்டுகளிலும் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்