உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்
உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்;
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் மன்ற அவை கூடத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றிய ஆணையர் விஸ்வநாதன் ஒன்றிய பொறியாளர் சசிரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
துணைத்தலைவர்: நமது மாவட்டத்தில் பன்றி காய்ச்சலும், விஷக்காய்ச்சலும் பரவிவருகிறது. எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சுகாதார முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதற்கு அதிகாரிகளும், ஒன்றியக்குழு உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை மேம்பாடு செய்யப்படும். அதற்கான பட்டியலை ஒன்றிய கவுன்சிலர்கள் வழங்க வேண்டும்.
கொள்முதல் நிலையம்
நாகூரான்: உத்திரங்குடி, ஊர்குடி கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும். தேவையான இடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் அனைத்து கிராமங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.
சத்தியேந்திரன்: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். எண்கண் பகுதி வாய்க்காலுக்கு ரெகுலேட்டர் அமைக்க வேண்டும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும்.
இயேசுராஜ்: வண்டம்பாளை நகர் பகுதியில் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே வடிகாலை சரி செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிக்கு சுடுகாட்டு சாலை வசதி செய்து தர வேண்டும்.
மீரா: எனது வார்டு பகுதிக்கு குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டும்.
உமா மகேஸ்வரி: சிராங்குடி பகுதிக்கு சாலை வசதி தேவை. விஷக்காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
படிப்படியாக நிறைவேற்றப்படும்
ஒன்றியக்குழு தலைவர்: உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியாளர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குரல்வேந்தன் நன்றி கூறினார்.