அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்

அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என அனைத்து சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2022-10-26 15:31 GMT

அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என அனைத்து சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

சமுதாய நல்லிணக்க கூட்டம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு பரதராமி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு கிராமங்களிலும் இதுபோன்ற மோதல்கள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என வலியுறுத்தி பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி வரவேற்றார்.

சகோதரத்துவத்துடன்...

இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கலந்துகொண்டு பேசினார். அப்போது அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இருந்து நன்றாக படிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேர வேண்டும். அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும், இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக சாதி மோதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சமுதாய நல்லிணக்க விருது பெற கிராம மக்கள் சமுதாய நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளை பெரியவர்கள் சமாதானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதற்கு இது குறித்து உரிய பரிசீலனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திராகாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்காந்தி உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்