அகில இந்திய அளவிலான கபடி இறுதிப்போட்டி; இன்று நடக்கிறது
மணப்பாறையில் அகில இந்திய அளவிலான கபடி இறுதிப்போட்டி இன்று நடக்கிறது;
மணப்பாறை, ஆக.28-
மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. ஆண், பெண் என இருபிரிவுகளாக நடைபெற்று வரும் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகின்றது. இதில் வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டுகிறார். கபடி போட்டி நடைபெறும் இடத்தின் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடக்கிறது. மணப்பாறையில் கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், அகில இந்திய அளவிலான கபடி போட்டி, கழக தலைவராக மு.க.ஸ்டாலின் பெறுப்பேற்று நான்காண்டு நிறைவு, மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்குகிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை கழக செயலாளருமான கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். இதில் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள், பொற்கிழி வழங்குகிறார். இதே போல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக மணப்பாறை ஒன்றியச் செயலாளர் ராமசாமி வரவேற்றுப் பேசுகிறார். முடிவில் நகரச் செயலாளர் மு.ம.செல்வம் நன்றி கூறுகிறார்.