அரசு பஸ்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு பஸ்களின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக அரசு பஸ்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகின்றன. தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பஸ்கள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அரசு பஸ்களின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.
அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த நிலையில், அரசு பஸ்களில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்டதாகவும், அனைத்து பஸ்களிலும் ஏற்பட்ட பழுதுகள் மே 6-ம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், ஒரு பஸ் கூட முழுமையாக பழுது நீக்கப்படவில்லை என்பதுதான் உண்மை என்பது தஞ்சாவூரில் பஸ்களின் அச்சு முறிந்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.
அரசு பஸ்களின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசுதான் காரணம். அரசு பஸ்களின் சேவை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. மாநிலத்தின் பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையும் முன்னேற வேண்டும் என்றால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இருக்க வேண்டியதும், அனைத்துக் கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட வேண்டியதும் கட்டாயம் ஆகும்.
இதை உணர்ந்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பஸ்கள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக புதிய பஸ்கள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பஸ்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.