விழிபிதுங்க செய்யும் விலைவாசி உயர்வு; இல்லத்தரசிகள் கருத்து
விலைவாசி உயர்வு விழிபிதுங்க செய்வதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.;
மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
விலை உயர்வு
ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
துவரம் பருப்பு
குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
மளிகை பொருட்கள்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள், அரிசி விலை கடந்த 2 வாரங்களாக அதிகரித்துள்ளது. இதில் பெரம்பலூரில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பொன்னி அரிசி ஒரு கிலோவிற்கு ரூ.4 முதல் ரூ.5 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி ஒரு கிலோவிற்கு ரூ.2 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் மளிகைப்பொருட்களில் துவரம்பருப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ ரூ.158 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்றுவந்த மிளகாய் வற்றல் தற்போது ஒரு கிலோ ரூ.280 வரை விற்கப்படுகிறது. மற்ற பொருட்களில் விலையும் உயர்ந்துள்ளது. இதில் உளுந்து கிலோ ரூ.132, சீரகம்- 100 கிராம் ரூ.80, சோம்பு 100 கிராம் ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு ஒரு கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களில் அதன் ரூ.5 உயர்ந்து, தற்போது ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.57-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கர்நாடகா பொன்னி அரிசி தற்போது 58 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ உளுந்து ரூ.160-க்கும், துவரம்பருப்பு கிலோ 140 ரூபாயில் இருந்து 160-க்கும், சீரகம் கிலோ ரூ.400-ல் இருந்து 735 ரூபாய்க்கும், சோம்பு ரூ.200 ரூபாயில் இருந்து ரூ.350 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது.
காய்கறிகள் விலை
பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டிலும், தனியார் காய்கறி கடைகளிலும் ஒரு கிலோ அடிப்படையில் நேற்று கத்தரி-ரூ.60, வெண்டை-ரூ.40, தக்காளி-ரூ.120, கேரட்-ரூ.120, பீட்ரூட்- ரூ.60, பீன்ஸ்- ரூ.160, முட்டைக்கோஸ்- ரூ.30, அவரை- ரூ.120, பாகற்காய்-ரூ.80, முள்ளங்கி-ரூ.60, புடலை- ரூ.60, சிறிய வெங்காயம்-ரூ.120, சேனைக்கிழங்கு- ரூ.80, உருளை- ரூ.30, கொத்தவரை-ரூ.60, கோவைக்காய்-ரூ.60, கருணைக்கிழங்கு-ரூ.80, முருங்கை- ரூ.80, பீர்க்கை- ரூ.80, பெல்லாரி- ரூ.30, கீரைகள்- 1 கட்டு ரூ.15, வாழைக்காய்- ரூ.8 (ஒன்று) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
அரியலூரில் மார்க்கெட் மற்றும் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெங்காயம் 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், இஞ்சி 100 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரையும், பீன்ஸ் 50 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
விழிபிதுங்க செய்யும் விலைவாசி உயர்வு குறித்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-
கட்டுப்படுத்த வேண்டும்
அரியலூர் தேரடியில் பூக்கடை வைத்திருக்கும் ராணி:- மளிகை பொருட்களில் முக்கியமான அரிசியும், பருப்பும் விலை உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயா்வு மக்களை பாதிக்க செய்வதாக உள்ளது. எங்களைப்போல் சாலை ஓரம் வியாபாரம் செய்பவர்களுக்கும், தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கும் போதிய வருமானம் கிடையாது. ஆனால் விலைவாசி மட்டும் உயர்ந்து வருகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி, உளுந்தம் பருப்பு போன்றவற்றை விலை குறைவாக விற்றால் பயனுள்ளதாக இருக்கும்.
எதிர்பார்ப்பு
அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கணேசன்:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
பொதுமக்கள் பாதிப்பு
எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி சாரதா ராமகிருஷ்ணன்:- இதுவரை இல்லாத அளவிற்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கடந்த 10 நாட்களாக உயர்ந்துள்ளது. பருவநிலை மாறுபட்டிருப்பதால், பொதுமக்களின் தேவைக்கேற்ப காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு இயற்கையினால் தள்ளப்படுகிறோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, மழை பெய்கிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதன் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலைவாசி உயர்வால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுகிறோம். கூலி, சம்பளம் அதிகமாக உயரவில்லை. ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.