"திருப்போரூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
உப்பளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2-வது விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இன்றும் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-
"சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பா.ம.க.வும் வலியுறுத்தி இருந்தது. இதற்காக தமிழக அரசு 6 இடங்களை தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை.
திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அந்த இடம் விவசாயத்திற்கு உகந்தது அல்ல என்பதால் அங்கு விமான நிலையம் அமைக்கலாம். அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்."
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.