பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம்

ஆனைமலையில் பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-10 03:45 GMT

ஆனைமலை

ஆனைமலையில் பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவர்கள் பெயர்ந்தன

ஆனைமலை பகுதியில் 23,000 ஹெக்டரில் தென்னை, 5,400 ஏக்கரில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், மானியம், விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் பற்றி அறிந்துகொள்ள ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 1970-ம் ஆண்டு வேளாண்மை அலுவலகம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மேற்பூச்சுகள் அவ்வப்போது விழுந்து வருகிறது.

கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. மேலும் மேற்கூரையில் புதர்கள் சூழ்ந்து உள்ளன. பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம் காணப்படுகிறது. மழை பெய்யும் போது, உள்ளே மழைநீர் ஒழுகுகிறது. ஆபத்தான நிலையில் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சிதிலமடைந்த நிலையில் உள்ள வேளாண்மை அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இடமாற்ற வேண்டும்

இதையடுத்து மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வேளாண்மை அலுவலகம் கட்ட அனுமதி கிடைத்தது. இதற்காக ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வேளாண்மை அலுவலக பணியை தொடர மாற்று கட்டிடம் கிடைக்காததால், நிதி வேறு பணிக்கு ஒதுக்கப்பட்டது. மீண்டும் கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1½ கோடி மதிப்பில் வேளாண்மை அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதனால் அலுவலகத்தை இடமாற்ற முயற்சி எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் வேளாண்மை அலுவலகத்தை ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் மாற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், 10 நாட்களை கடந்தும் வேளாண்மை அலுவலகம் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தொடர்ந்து பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, பாதுகாப்பு கருதி வேளாண்மை அலுவலகத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்து, புதிய அலுவலகத்தை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்