விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
தியாகதுருகம் அருகே விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே நாகலூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி முதல்வரும், வேளாண் விஞ்ஞானியுமான முத்துகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிர்களில் பூச்சி தாக்குதல் மற்றும் களை கட்டுப்படுத்துதல், கூடுதல் மகசூல் பெறுவது குறித்தும் விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசினார். தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து நிலத்தில் எந்தெந்த சத்துக்கள் உள்ளது என தெரிந்து, அதற்கு ஏற்றவாறு பயிர் செய்து கூடுதல் மகசூல் பெறலாம். 5 ஏக்கருக்கு குறைவான நிலமுள்ள விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயனடையலாம். மேலும் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்தி தனியார் உரக்கடை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்புகள், வேளாண்மை அலுவலகத்தில் விதை இருப்புகள், பயிர் காப்பீட்டு உள்ளிட்ட 23 வகையான பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் என்றார். முன்னதாக வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விவசாய கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி பெருமாள், நாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், உதவி விதை அலுவலர் மொட்டையாப்பிள்ளை மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு நன்றி கூறினார்.