முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்

திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். மேலும் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள்,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-22 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். மேலும் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள்,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளியாறு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. எந்தவித தொழிற் சாலைகளோ, பணப்பயிர் தரக்கூடிய வேறு தொழிலோ இங்கு கிடையாது. ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும், இதற்கு தேவையான தண்ணீரை,கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வழங்கினால், குருவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர் சாகுபடி செய்யப்படும்.

ஆனால் சில வருடங்களாகவே கர்நாடகாவில் இருந்து முறையாக தண்ணீர் வழங்காமலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளதாலும் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அவசர அவசரமாக தூர்வாரும் பணியை மேற்கொள்வதால், முழுமையாக தூர்வாரப்படாமல் இதனால் கடைசி கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

கழிவுநீர் கலப்பதால்...

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் முள்ளியாற்றை தூர்வார வேண்டும். மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் முள்ளியாற்றை ஆக்்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் முள்ளியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையாக தூர்வார வேண்டும்

பள்ளங்கோயிலை சேர்ந்த விவசாயி ராஜா கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக திருத்துறைப்பூண்டி பகுதி அதிகளவு விவசாயிகள் வாழும் பகுதியாகும். இங்கு பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கும் போர்செட் வசதிகளோ, வேறு எந்த வசதியும் இல்லை. முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்.

விவசாயத்தை நம்பியே உள்ள விவசாயிகள் வேறு தொழிலை நாடி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முள்ளியாறை சூழ்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி முறையாக தூர்வாரி விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயம் மட்டுமே பிரதான தொழில்

விளக்குடியை சேர்ந்த விவசாயி சீராளன்:-

தூர்வாரும் பணிகள் அவசர அவசரமாக செய்யாமல் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் செய்தல் சிறப்பாக செய்ய முடியும். மேலும் விவசாயம் மட்டுமே இந்த பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.

எனவே ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாக தூர்வாரினால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் சென்று முறையாக விவசாயம் செய்ய முடியும். அதற்கு அதிகாரிகள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உடனடியாக ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணியை மேற்கொள்வதுடன், ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்