குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டது
குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டது.
பிள்ளையார்குளம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடி கிராமத்தில் பிள்ளையார் குளம் உள்ளது. இந்த குளத்தினை உச்சுவாடி நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, வடக்கு தெரு, கீழ உச்சுவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குளம் முழுவதும் சூழ்ந்து ஆகாயத்தாமரை செடிகள் காணப்பட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் இருக்கும் இடம் கூட தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகளே ஆக்கிரமிப்பு செய்தது போல் காட்சி அளித்தது.
ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டது
இதனால் குளத்தில் இறங்கி குளிப்பதோ அல்லது ஆடைகள் துவைப்பதோ முடியாமல் போனது. குளத்தை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அதனால் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூய்மைபடுத்தி தந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.