அகரம்சீகூர் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு
அகரம்சீகூர் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களமேடு:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க.வினர் போராட்டத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அந்த மாவட்ட எல்லையின் அருகே பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள், அகரம்சீகூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்தனர். அதேநேரத்தில் அகரம்சீகூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் அங்கு மதுபாட்டில்கள் வந்த வந்தனர். இதனால் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு கூடியதால், அந்த பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்தனர். மேலும் கட்டுகடங்காத மது பிரியர்கள் கூட்டத்தால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் திக்குமுக்காடினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே அந்த டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று மகளிர் சங்கம், அந்த பகுதி மக்கள் என பலர் போராட்டம் நடத்தினர். அப்போது 3 மாதத்திற்குள் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.