அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

Update: 2022-11-27 22:29 GMT

வள்ளியூர் தெற்கு:

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை தீப திருவிழா

கார்த்திகை தீப திருநாள் வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடு, கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதற்காக மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்து வருகிறது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண் பாண்ட தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் நம்பியாற்று கரையில் இருப்பதால் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகள், மண்பானை உள்ளிட்ட பொருட்களை செய்கிறார்கள்.

தனி மவுசு

விளக்கு, மண்பானைகளுக்கு நெல்லை மாவட்டத்தில் தனி மவுசு உண்டு. இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் சில வருடங்களாக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்த நிலையில் போதிய மண் கிடைக்காமல் விளக்கு உற்பத்தி செய்ய முடியாமலும், போதிய வருமானம் இல்லாமலும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வாழ்வாதாரம் கேள்விக்குறி

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். தற்போதைய காலத்தில் உரிய மண் எடுக்க அனுமதி இல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனினும் கிடைக்கும் மண்ணை கொண்டு விளக்கு, மண்பானை தயார் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கால கட்டத்தில் கார்த்திகை திருவிழா தடைபட்டு காணப்பட்டாலும், இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்