வத்தலக்குண்டு-கொடைரோடு இடையே முத்துலாபுரம் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவை; கிராம மக்கள் மனு

வத்தலக்குண்டு-கொடைரோடு இடையே முத்துலாபுரம் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-02-27 20:30 GMT

வத்தலக்குண்டு-கொடைரோடு இடையே முத்துலாபுரம் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அதன்படி, ஆம் ஆத்மி நிலக்கோட்டை தொகுதி செயலாளர் ராமு தலைமையில் முத்துலாபுரம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வத்தலக்குண்டு-கொடைரோடு இடையே முத்துலாபுரம் கிராமத்தின் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

230 மனுக்கள்

அதேபோல் நத்தம் தாலுகா சிரங்காட்டுப்பட்டி மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டு (பி.எச்.எச்.) தற்போது முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டுகளாக (என்.பி.எச்.எச்.) மாற்றப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மீண்டும் அந்த ரேஷன் கார்டுகளை முன்னுரிமை உள்ள அட்டைகளாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 230 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கு தொழில் கடனுதவி, 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதையடுத்து நேபாளத்தில் நடந்த பாரா துரோபால் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற நிலக்கோட்டை மைக்கேல்பாளையத்தை சேர்ந்த வீராங்கனை ரோஸ்மேரியை கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்