அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து ஜெயக்குமார் சிறப்பு முகாமுக்கு மாற்றம்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து ஜெயக்குமார் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.

Update: 2022-11-20 21:26 GMT

முகாமில் தங்க வைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.

இதனால், அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்பும் வரை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகன், சாந்தன் ஆகியோருக்கு ஒரு அறையும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

இதில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தங்களுக்கு வேறு அறை ஒதுக்கித்தரும்படியும், முகாமில் உள்ள மற்றவர்களுடன் பேச அனுமதிக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அறையை மாற்றி கொடுக்காததால், கடந்த 17-ந்தேதி காலை 9 மணி முதல் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேரும் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர்.

நேற்று முன்தினம் மதியம் ஜெயக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர், திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிறப்பு முகாமுக்கு மாற்றம்

இந்தநிலையில் நேற்று காலை அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து பிற்பகலில் அவர் திருச்சி சிறப்பு முகாமுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டார். அங்கு ஜெயக்குமாரும், ராபர்ட் பயாசும் நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்