தேர்வு எழுத பயந்துமர்ம நபர்கள் சிறுமியை கடத்தியதாக நாடகமாடிய மாணவி;ஈரோட்டில் பரபரப்பு

ஈரோட்டில் தேர்வு எழுத பயந்து சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்த 6-ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-26 21:11 GMT

ஈரோட்டில் தேர்வு எழுத பயந்து சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்த 6-ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி கடத்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று தேர்வு எழுதுவதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு 3 மாணவிகள் பதற்றத்துடன் வந்தனர். அப்போது அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று, தாங்கள் இடையன்காட்டுவலசு பகுதியில் நடந்து வந்தபோது, ஒரு சிறுமி 4-ம் வகுப்பு புத்தகத்தை படித்து கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் மாணவிகளை அழைத்து சென்று கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை

அங்குள்ள கடைக்காரர்கள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் நடந்த விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர். ஆனால் அதுபோன்ற சம்பவத்தை பார்க்கவில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். ஆனால் மாணவிகள் நடந்து சென்ற நேரத்தில் கடத்தல் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. எனவே மாணவி உண்மையிலேயே கடத்தப்பட்டாரா? அந்த மாணவி யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதாமல் யாராவது உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே மாணவி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனரா? என்று பெற்றோரும் பள்ளிக்கூடத்துக்கு வந்து தகவல் அறிந்து கொண்டனர். அதேபோல் ஆசிரியர்களும் தங்களது வகுப்பறைகளில் உள்ள குழந்தைகளின் வருகையை சரிபார்த்தனர்.

நாடகம்

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் புகார் கூறிய மாணவி, கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமியை மர்மநபர்கள் கடத்தி சென்றனர் என்று 3 மாணவிகள் நேரில் பார்த்ததாக கூறினர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கண்காணிப்பு கேமராக்களிலும் அந்த சம்பவம் நடந்ததாக பதிவாகவில்லை. நேரில் பார்த்ததாக கூறிய மாணவிகளிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேர்வுக்கு சரியாக படிக்காததால் தேர்வு பயத்தில், தேர்வு எழுதுவதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக கற்பனையாக சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்து நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளோம், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்