வேறொருவருடன் பழக்கம்: கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த கள்ளக்காதலன்
வேறொருவருடன் பழகியதால் கள்ளக்காதலியை கொன்றதாக கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் மலட்டாற்று பகுதியில் நேற்று முன்தினம் மாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி வசந்தி (வயது 31) என்பவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தியை கொலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வசந்தியை கொலை செய்தது புதுப்பேட்டையை அடுத்த ரெட்டிக்குப்பத்தை சேர்ந்த கஞ்சமலை மகனான தொழிலாளி தெய்வக்கண்ணு (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து தெய்வக்கண்ணுவை புதுப்பேட்டை போலீசார் மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தெய்வக்கண்ணுவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர், வசந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-
வசந்திக்கு சொந்த ஊர் விழுப்புரம் அருகே வி.அரியலூர் கிராமமாகும். இவருக்கும், கரும்பூரை சேர்ந்த குப்புசாமிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குப்புசாமி, மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். வசந்தி விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடை உரிமையாளர் வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.
வசந்திக்கும், அவரது பக்கத்து ஊரில் வசித்து வரும் தெய்வக்கண்ணுவுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இதற்காக வசந்திக்கு அவ்வப்போது தெய்வக்கண்ணு நகை, பணம் கொடுத்து வந்துள்ளார். இவ்வாறாக அவர், வசந்திக்கு ரூ.1 லட்சம் மற்றும் 3 பவுன் நகை வரை கொடுத்துள்ளார். இந்த சூழலில் கடந்த 4 மாதங்களாக தெய்வக்கண்ணுவிடம் வசந்தி பேசுவதில்லை. இதுபற்றி அவரிடம் தெய்வக்கண்ணு கேட்டபோதிலும் சரியாக பதில் சொல்லவில்லை. பின்னர்தான் வசந்தி, வேறு ஒரு வாலிபருடன் பழகி வந்த விஷயம் தெய்வக்கண்ணுவிற்கு தெரியவந்துள்ளது.
இதுபற்றி வசந்தியிடம் கேட்டு அவர் பிரச்சினை செய்துள்ளார். இருப்பினும் தெய்வக்கண்ணுவிடம் வசந்தி சரிவர பேசவில்லை. தன்னுடன் பழகி நகை, பணத்தை வாங்கிக்கொண்ட வசந்தி, தற்போது வேறொருவருடன் பழகி வருகிறாரே என்று அவர் மீது தெய்வக்கண்ணுவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் வசந்தியை கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டினார்.
இதற்காக கடந்த 4-ந் தேதியன்று வசந்தியை தொடர்புகொண்டு பேசிய தெய்வக்கண்ணு, அடகு நகைகளை மீட்டு தருகிறேன் என்றும் தன்னுடன் வரும்படியும் ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய வசந்தி, அன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினார். பின்னர் அவரை தெய்வக்கண்ணு மோட்டார் சைக்கிளில் காவணிப்பாக்கம் மலட்டாற்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஏற்கனவே மது, உணவு வாங்கி வைத்திருந்த தெய்வக்கண்ணு அங்குள்ள மலட்டாற்று பகுதியில் வைத்து மது அருந்தினார்.
பின்னர் வசந்தியுடன் அவர் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு கம்பங்கூழில் மயக்க மருந்து கலந்து வசந்திக்கு கொடுத்துள்ளார். அதை குடித்ததும் வசந்தியிடம், என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய் என்று கேட்டபோது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர் வசந்தியை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். தெய்வக்கண்ணு வெகுநாட்களாக காணாததால் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர்.
இந்த விஷயம் தெய்வக்கண்ணுக்கு தெரியவரவே, வசந்தியை கொலை செய்த தடயங்களை மறைப்பதற்காக கடந்த 15-ந் தேதி மீண்டும் காவணிப்பாக்கம் மலட்டாற்று பகுதிக்குச்சென்றுள்ளர். அங்கு கிடந்த வசந்தியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து ரெட்டிக்குப்பம் வந்துவிட்டார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தெய்வக்கண்ணு மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.