கோர்ட்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியை வக்கீல்கள் பயன்படுத்த வேண்டும்சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேச்சு
முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேச்சு
கோர்ட்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியை வக்கீல்கள் பயன்படுத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.
தொழில் நுட்ப வளர்ச்சி
ஈரோட்டில் மறைந்த மூத்த வக்கீல் ஏ.பி.சின்னசாமி நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்கி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் காலம் உலக மக்களுக்கே சவாலான காலமாக இருந்தது. அப்போது நீதித்துறைக்கும் அது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் நீதித்துறை சவால்களை கடந்து புதிய தொழில்நுட்பங்களை கையாள தொடங்கி இருக்கிறது.
நீதித்துறையை பொறுத்தவரை 1990-ம் ஆண்டுகளில் கணினி மயம் தொடங்கியது. 2000-ம் ஆண்டில் மின் ஆளுமை கொண்டுவரப்பட்டது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு இ-கோர்ட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து கோர்ட்டுக்கான தனி செயலிகளும் உள்ளன. ஆனால் கொரோனா காலம் தொழில் நுட்பத்தை முழுமையாக பின்பற்றும் நிலைக்கு கொண்டு வந்தது. வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம். அதே நேரம், ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தினாலும் வக்கீல்கள் கோர்ட்டில் அணியும் உடையுடன் பங்கு பெற வேண்டும்.
வக்கீல்களை சந்திக்க வேண்டும்
இதுபோல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை வக்கீல்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வழக்குகள் அதிக காலம் நிலுவையில் இருக்கக்கூடாது. விரைவாக முடிக்கப்பட வேண்டும். மாவட்டங்களில் பொறுப்பில் இருக்கும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டிப்பாக மாதத்துக்கு ஒரு முறை தங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வக்கீல்களை சந்திக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.