விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்குவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி 10-ந்தேதி நெய்வேலி ஆர்ச் கேட் அருகே மறியல் போராட்டம் போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்
விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்குவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி வருகிற 10-ந்தேதி நெய்வேலி ஆர்ச் கேட் அருகே மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெய்வேலி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் 15 சமூக அமைப்புகள் கொண்ட வி.கே.டி. போராட்டக்குழு அமைக்கப்பட்டு, அதன் செயல்வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் நடந்தது. இதற்கு போராட்டக்குழு தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் வேல்முருகன், குப்புசாமி, ஜெயராமன், திருஅரசு, சீனிவாசன், சி.பி.ஐ.எம். பாலமுருகன், மேரி, வி.சி.க. வெங்கடேசன், எல்.எல்.எப் காசிநாதன், ராஜேந்திரன், காங்கிரஸ் இளங்கோவன், ஐ.என்.டி.யு.சி. ரவிகுமார், ம.தி.மு.க. மத்தியாஸ், சி.பி.ஐ. குணசேகரன், எ.ஐ.டி.யு.சி. சவுந்தர்ராஜன், டி.டி.யு.சி. வேலு ஆகியோர் கலந்து கொண்டு ஆமை வேகத்தில் நடக்கும் விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் மேற்கண்ட சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்வது, தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது, வருகிற 6-ந்தேதி சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடத்துவது, 10-ந்தேதி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.