கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகளை முழு வீச்சில் முடிக்க ஆலோசனை - அமைச்சர் சேகர்பாபு தலைமை

சி.எம்.டி.ஏ. குழும கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க ஆலோசிக்கப்பட்டது.

Update: 2023-07-25 04:43 GMT

சென்னை, 

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) குழும கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத்திடலை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதி அளித்தல் போன்றவை குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில், பொது மக்களுக்கான அடிப்படை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இணைப்பு சாலை பணிகளும் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்