கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டாரா? போலீஸ் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-25 05:47 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது மனைவி ரோஜா (44). இவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு ஜாய் (24) என்ற மகளும், ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த ரமேஷ் குமார் மதிய நேரத்தில் வீட்டுக்கு போன் செய்துள்ளார். 2 பேரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ரமேஷ் குமார் வீட்டின் அருகே உள்ள உறவினருக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படியாக கூறினார்.

அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கு யாரும் இல்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு 'ஹார்ட் டிஸ்க்' மாயமாகி இருந்தது. மேலும் வீட்டில் இருந்த கார் ஒன்றும் காணாமல் போனது. இதுகுறித்து ரமேஷ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பல்லவாடா போலீசில் புகார் தெரிவித்தார். எனவே பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து போலீசார் இருவரது செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் வரதையாபாளையத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே காருடன் அவர்களை மர்ம ஆசாமிகள், ஆந்திரா நோக்கி கடத்தி சென்றதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.கல்யாண் நேரில் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கவுன்சிலர் மகனுடன் தப்பி வந்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்