அ.தி.மு.க. மாநாட்டை எங்கு நடத்துவது? மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

அ.தி.மு.க. மாநாட்டை எங்கு நடத்துவது? என்பது குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2023-05-08 21:10 GMT


அ.தி.மு.க. மாநாட்டை எங்கு நடத்துவது? என்பது குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இடம் தேர்வு

அ.தி.மு.க.வின் மாநில மாநாடு, வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மதுரை ரிங்ரோடு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி, தங்கமணி, செல்லூர் ராஜூ, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் நடைபெறுகிறது. அதற்காக 3 இடங்களில் பார்த்து உள்ளோம். இது குறித்து எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்வோம். அவர் அறிவிக்கும் இடத்தில் மாநாடு பணிகள் தொடங்கப்படும். தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சியில், ஏழை, எளிய அடித்தள மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறுத்தியது தான் சாதனை.எந்த ஒரு புதிய திட்டத்தையும் தி.மு.க. கொண்டு வரவில்லை.

ரவுடிகள் தொல்லை

இந்த தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நிதி அமைச்சரே ஆடியோவில் கூறி உள்ளார். தி.மு.க.வின் முறைகேடுகள் எல்லாம் நிதி அமைச்சர் மூலம் வெளிவந்து உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு ரவுடிகள் தொல்லை அதிகரித்து உள்ளது. மணல் கொள்ளையில் தி.மு.க. நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். மணல் கொள்ளையை தட்டி கேட்ட கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டு உள்ளார். ஓ.பன்னீர்செல்வம்- சபரீசன் சந்தித்து பேசியது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். வெட்கம் கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்