அ.தி.மு.க. பிரமுகரை குச்சியால் அடித்துக்கொன்ற மகன்

குன்னம் அருகே அ.தி.மு.க. பிரமுகரை குச்சியால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Update: 2023-06-02 19:20 GMT

அ.தி.மு.க. பிரமுகர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). அ.தி.மு.க. பிரமுகரான இவர் விவசாயமும் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மணிமொழி. இவர்களுடைய மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில், அசோக்ராஜ் கடந்த 6 மாதங்களாக சரிவர மாத்திரை சாப்பிடாததால் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்துள்ளார்.

சிறையில் அடைப்பு

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது தாயார் மணிமொழியை அசோக்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்த செல்வராஜை, அசோக்ராஜ் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்ராஜை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்