விலைவாசி உயர்வை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் வரவேற்றார். இதில், முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.30 ஆயிரம் கோடி ஊழல்
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.
மக்களின் பிரச்சினைகளுக்காக அ.தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விலைவாசி உயர்வை பற்றி எந்த கவலையும் இல்லை. அவருக்கு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை பற்றி தான் கவலை. ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் ரகசியம் என்ன? செந்தில்பாலாஜி வாய் திறந்தால் எல்லா உண்மையும் வெளிவந்துவிடும்.
விஞ்ஞான ரீதியில் ஊழல்
அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எங்கள் கண்களை பிடுங்கி எங்களையே குத்த முயற்சி செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னை சைதாப்பேட்டையில் இன்றைய தினம் (அதாவது நேற்று) பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மகளிர் உரிமை தொகைக்கு தற்போது விண்ணப்பங்கள் தான் வழங்கப்படுகின்றன. இதில், தகுதியானவர்கள் பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.1,000 பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டது.
எனவே மகளிர் உரிமை தொகையை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம். விஞ்ஞான ரீதியில் தி.மு.க.வினர் ஊழல் செய்து வருகிறார்கள். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அல்லது இனிவரும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு பி.வளர்மதி பேசினார்.
தக்காளி, வெங்காயம்
இதைத்தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பருப்பு, முருங்கைக்காய் போன்றவற்றை கைகளில் எடுத்து வந்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலசுப்ரமணியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரராஜன், ராஜமுத்து, ஜெயசங்கரன், சித்ரா, நல்லதம்பி, மணி, மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, சந்திரா கிருபாகரன், முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.