தாம்பரத்தில் 5-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுகாதார சீர்கேட்டை கண்டித்து, தாம்பரத்தில் வருகிற 5-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;

Update:2023-10-02 05:59 IST

சென்னை,

தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மண்டலம் 5-ல் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

மின்சார கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை எரிவதில்லை. இதன் காரணமாக, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளும், விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவித்தும், இன்னும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் சரிவர முடிக்கப்படவில்லை.

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடை திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவுநீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்ய தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை குறைத்து, இத்திட்டத்துக்கு மூடுவிழா காணத்துடிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதி கழகங்கள் ஒன்றிணைந்து வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்