அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதம் : 23 நிபந்தனைகள் விதித்த காவல்துறை

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

Update: 2024-06-26 17:58 GMT

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையில் அவைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த விடாமல் இருப்பதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்யுமாறு அவை முன்னர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். அதன்பேரில் கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கையை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக சென்னையில் வள்ளுவர் கோட்டம் உள்பட 4 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்துள்ளது. இதன்படி, "உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது" என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்