போடி அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 3 கிராம அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
போடி அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது;
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களின் ஆதரவாளர்கள் தனித்தனியாக பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இதற்கிடையே நேற்று தேனி மாவட்டம் கம்பம் அருகே அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜக்கையன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இந்நிலையில் போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல் களத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கு பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். அப்போது பொட்டல்களம், செல்லாயி அம்மாள்புரம், மீனாட்சிபுரம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். இதையடுத்து கூட்டத்தில் 3 கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. வினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.