அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்த 2,300 உறுப்பினர்கள் கடிதம்

‘‘அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தக்கோரி 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்ப கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்’’, என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-21 21:56 GMT

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி 23-ந்தேதி (நாளை) நடைபெற வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவருமே விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும் என்று 2,300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களே விருப்ப கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே ஒற்றை தலைமை என்ற கருத்தை கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரும் ஏற்று, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே ஒற்றை தலைமை எனும் கருத்து 100 சதவீதம் ஏற்கப்பட்டு விட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் உள்நோக்கம் என்ன?

பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட இருவரும் கட்சி அலுவலகத்தில் சந்திக்கலாம். தொலைபேசி வழியாக பேசி முடிவு எடுக்கலாம். ஆனால் கடிதம் எழுதுவது என்பது வழக்கமான முறை அல்ல. இதுவே தவறு. அந்த கடிதத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துவிட்டார்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் எப்படி வெளியே கசிந்தது?. கட்சியின் நலன் பாதிக்கும் வகையில் எப்படி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது?. இது நியாயமா?. இது அ.தி.மு.க.வில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளா?. ஏதாவது முக்கியமாக இருந்தால் தொலைபேசியில் பேசவேண்டியது தானே. இப்படி கடிதம் எழுதி, வேண்டும் என்றே அதை வெளியிடலாமா? இதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒற்றை தலைமை வேண்டும் என்றும், அது எடப்பாடிபழனிசாமியாக இருக்கவேண்டும் என்பதே கட்சியினர் இடையே எழுச்சியாக காணப்படுகிறது. இதை எப்படியாவது தடுக்கும் எண்ணத்துடன் நீதிமன்றம் செல்கிறார், கடிதம் எழுதுகிறார். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.

நீக்கப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதா?

ஒற்றை தலைமை என்பது வெளிப்படையாக பார்க்கப்பட வேண்டிய விஷயம். இதை அடிமட்ட தொண்டனுக்கும் தெரியவேண்டும். இது நல்ல விஷயம் என்பதால் அதை வெளியே சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது. வெளிப்படை தன்மை வேண்டும் என்பதாலேயே ஒற்றை தலைமை குறித்து கூறினேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, இவர்களுடன் யாரும் தொடர்புவைத்துக்கொள்ள கூடாது என்றுதான் இதுவரை கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்தாரா, இல்லையே... ஆனால் புகழேந்தி உள்பட நீக்கப்பட்ட நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். இது தவறில்லையா... கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் சட்டதிட்டம் பொருந்தாதா? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம், சாதாரண நபருக்கு ஒரு சட்டமா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்