இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பிரமுகர் 3 ஓட்டில் வெற்றி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பிரமுகர் 3 ஓட்டில் வெற்றி பெற்றதை யடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 பேர் போட்டியிட்டனர். 3,933 ஓட்டுகள் கொண்ட இங்கு 3,294 ஓட்டுகள் பதிவானது. இதில் சுயேச்சை சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் யோக சுந்தரி 1,433 ஓட்டுகளை பெற்றார்.
தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுதா 1,430 ஓட்டுகளை பெற்றார். இதனையடுத்து தி.மு.க.வினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் விதியின்படி 3 ஓட்டுகள் வித்தியாசத்தில் யோக சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவித்தார். அதற்கான சான்றிதழையும் அவரிடம் வழங்கினார்.
இதனையடுத்து தி.மு.க.வினர் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொன் சிவக்குமார், சத்திய சாய் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், மதுராந்தகம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமல்ராஜ், வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் உள்ளிட்ட போலீசார் தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.