அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..!

அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.

Update: 2023-02-07 01:28 GMT

சென்னை,


முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையாக நிர்வகிப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.


ஒரே கட்சியில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. தங்களது அணிக்கே இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும், இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள குறிப்பிட்ட நபர்களும் பங்கேற்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்துக்கு உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.


இதன் அடிப்படையில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் தேர்வு தொடர்பான ஒப்புதல் படிவங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை சேகரித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று டெல்லி எடுத்து சென்றார்.


அங்கு சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் இன்பதுரை உள்ளிட்டோருடன் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


பின்னர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அ.தி.மு.க.வின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆவணங்களை தேர்தல் கமிஷனில் ஒப்படைத்து உள்ளோம்.


இதற்கு உரிய நடவடிக்கையை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் அதிகாரப்பூர்வ அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்து உள்ளனர். அந்த ஆவணங்களை ஒப்படைத்து உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை உறுப்பினர்கள் ஆதரித்தனர்? என்பது பற்றி சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் 2,665 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 15 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் எம்.பி. பதவிக்காலம் முடிந்ததால் விலக நேரிட்டது. மேலும் 2 பேர் மாற்றுக்கட்சிக்கு சென்று விட்டனர். இந்த 19 பேர் போக மீதமுள்ள 2,646 பேர் வாக்களிக்க உரிமை பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், வாட்ஸ்அப், மின்னஞ்சல், விரைவு தபால் மற்றும் பதிவுத்தபால் என அனைத்து வகைகளிலும் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யப்பட்டது.


அதில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஏற்கலாம், மறுக்கலாம் அல்லது வேறு யாரையும் முன்மொழி யலாம் என்று தெளிவாக சொல்லப்பட்டு இருந்தது. ஒரே ஒருவரின் பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். அது தவறு. யாரும், யாரையும் தடுக்கவில்லை.


வாக்களிக்க உரிமை பெற்ற 2,646 பேரில் 2,501 பேர் கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று வாக்களித்து இருக்கிறார்கள். மறுப்பு என ஒன்றும் வரவில்லை. 145 வாக்குகள் பதிவாக இல்லை. இதுதான் நிலை.


இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என அவர்கள் வேட்பாளரை திரும்ப பெற்றிருப்பது 'ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை' என்று சொல்வது போல உள்ளது. அதுபற்றி நாங்கள் பேச தயார் இல்லை.


இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.


இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை ஆராய்ந்து, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு புதிய அதிகாரத்தை வழங்கி உள்ளது.


அதாவது அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது. இது தமிழ்மகன் உசேனுக்கு குறுகிய கால அதிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று மனு தாக்கல்


எனவே அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கலுக்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திடுகிறார். இதனையடுத்து இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


வேட்பு மனுவை வாபஸ் பெற 10-ந்தேதி இறுதி நாள் ஆகும். அதற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்