அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் திடீர் சாலைமறியல்

வேலூரில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-15 18:56 GMT

சிலைக்கு மாலை

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது முழு உருவச்சிலைகள் அமைந்துள்ளது. இருவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பல்வேறு தரப்பினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அதன்படி நேற்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் மூர்த்தி மற்றும் பலர் மாலை அணிவிக்க அங்கு வந்தனர்.

இதேபோன்று தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் சிலைகளுக்கு முன்பு தி.மு.க. கட்சிக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதைப்பார்த்த அவர்கள் சிலைகளுக்கு முன்பு உள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறி மாலை அணிவிக்காமல் போராட்டத்தில் ஈடுபட தயாராகினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தி.மு.க. கட்சி கொடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு கொடிகள் அகற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு தனித்தனியே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்