அ.தி.மு.க. சார்பில் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு வங்கியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து கொடுத்தார்

தேவர் குருபூஜையையொட்டி அ.தி.மு.க. சார்பில் வங்கியில் இருந்து 13 கிேலா தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.;

Update:2023-10-26 00:30 IST

கமுதி

தேவருக்கு தங்க கவசம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 28-ந் தேதி முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மிக விழா, 29-ந் தேதி அரசியல் விழா, 30-ந் தேதி குருபூஜை நடக்கிறது. குருபூஜை விழாவில் தமிழக அரசு சார்பில் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.

பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் வழங்கினார். அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வங்கியில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. கட்சியின் பொருளாளர் கையெழுத்து போட்டு அதனை எடுத்து கொடுப்பது வழக்கம்.

திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

அதன்படி தேவரின் தங்ககவசத்தை எடுக்க அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் அண்ணாநகரில் உள்ள வங்கிக்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை பெற்று கொண்டனர். அப்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், மணிகண்டன், எம்.எல்.ஏ.ராஜன்செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், டாக்டர் சரவணன் உடனிருந்தனர்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மதியம் 3 மணியளவில் தேவர் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, எம்.ஜி.ஆர். அணி செயலாளர் எருமக்குளம் பெரியசாமி தேவர், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தமிழ்வாணன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ேமலும் முக்கிய தலைவர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் கண்காணிப்பு கேமரா, உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல், சோதனை மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குருபூஜை முடிந்த பின்னர் மீண்டும் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்